தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாழிக்கிணற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடக் கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகவும், சிறந்த பரிகாலத்தலமாகவும் விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமின்றி, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோயில் முன்புள்ள கடற்கரையில் நீராடி பின்னர் கடற்கரையோரம் உள்ள நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு முருகனை வழிபாடு செய்யச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடப்பதால், மின்மோட்டார் மூலம் தீர்த்த தொட்டியில் தீர்த்தம் நிரப்பி பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.