சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி முதல் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட, சென்னை மட்டும் அல்லாது வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது குடும்பத்துடன் வந்திருந்து இந்நிகழ்ச்சியை கண்டு களித்தார். துணை முதல்வரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோரும் நமது விமானப் படை வீரர்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்களை கண்டு ரசித்தனர்.
இதுமட்டும் அல்லாது, இந்த நிகழ்ச்சியில் சுகோய் 30 MKI, MI 17, VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர், தேஜஸ் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள், மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின.