மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி, கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மறவப்பட்டியில், 10 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், ''திமுக தற்போது 75ஆம் ஆண்டு முப்பெரும் விழாவை கொண்டாடியது. அதேபோல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அதிமுக கொண்டாடியது. அந்த விழா மக்களுக்கு பயனுள்ளதாக கொண்டாடப்பட்டது.
அதிமுக தொடங்கி 52 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்து ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியது.
இதையும் படிங்க:சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் - திருமாவளவன் மகிழ்ச்சி!
சமூகநீதி, மாநில சுயாட்சி, சம தர்மம், சுயமரியாதை என்று திமுக பவள விழாவில் பேசி வருகிறார்கள். ஆனால், முதலமைச்சர் அமர்ந்திருந்த அந்த மேடையில் அவருடன் உதயநிதியும், கனிமொழியும் அமர்ந்திருந்தனர்.
ஆனால், கீழே மூத்த அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இதன் மூலம் திமுகவின் சுயமரியாதை எங்கே போனது. மேடையில் இடமில்லையா? இல்லை மு.க ஸ்டாலின் மனதில் இடம் இல்லையா? இன்றைக்கு மக்களுக்காக இனம் வளர வேண்டும், மொழி வளர வேண்டும் என்று அதிமுக போராடி வருகிறது.
அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் எளிதாக வர முடியும். திமுகவில் அது போன்று வர முடியாது. கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை அண்ணா ஆரம்பித்தார். வாரிசு அரசியலை அவர் ஊக்குவிக்கவில்லை. ஆனால், இன்றைக்கு திமுகவில் வாரிசு அரசியல் மேலோங்கி உள்ளது. மின்கட்டணம், சொத்து வரி உயர்ந்துவிட்டது. தற்போது மீண்டும் சொத்து வரி உயர போகிறது, சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
போதை பொருள் புழக்கத்தால் தமிழகமே தலை குனிந்துள்ளது. ஆனால், இதை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2026 தேர்தல் நிச்சயம் அமையும்'' என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்