வேலூர்:நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து பள்ளிக்கொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "அதிமுகவால் அடையாளம் காணப்பட்டவர், இன்று நம்மை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் நம்மை துரோகி என்றும், நாம் முதுகில் குத்தியதாகவும் கூறுகிறார். அதிமுக யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. 2019ஆம் அண்டு தேர்தலில் அதிமுக அவருக்காக கடுமையாக உழைத்தது. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்" என ஏ.சி.சண்முகத்தை சாடி பேசினார்.
தொடர்ந்து பேசி அவர், "வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பவுடர் போட்டியா? பேரன் லவ்லி போட்டியா? என இழிவாக பேசுகிறார். இன்னொரு அமைச்சர் பெண்களின் இலவச பேருந்து பயணத்தை 'ஓசி பஸ்' என்று பேசுகிறார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் திமுகவிற்கு, பெண்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது 75 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால் வெளியில் ஒரு கோடி பேருக்கு மேல் கொடுத்துள்ளதாக பொய் சொல்லி வருகின்றனர். இது குறித்து மக்கள் இன்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்" என்று பேசினார்.
மக்கள் வெறுக்கும் திமுக ஆட்சி: மேலும், "மடிக்கணினி திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்திவிட்டது. அன்று மாணவர்கள் மடியில் மடிக்கணினி விளையாடியது. ஆனால் இன்று மாணவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கும் ஒரே அரசு திமுக தான்" என கடுமையாக சாடினார்.
கும்பகர்ண தூக்கம் போடும் திமுக:தொடர்ந்து பேசிய அவர், "ஆந்திரா அரசு ரூ.300 கோடி செலவில் பாலாற்றில் கட்டும் தடுப்பணையை திமுக அரசு தடுக்க வக்கில்லாமல் உள்ளது. பாலாற்றில் அணை கட்டிவிட்டால் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக மாறும். இனியாவது கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து திமுக எழுந்துக் கொள்ள வேண்டும்" என விமர்சித்து பேசினார்.