சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 26) காலை கூடியதும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கமிட்டனர். மேலும் கள்ளச்சாரய விவகாரத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கள்ளச்சாராய விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த பிறகும் அது குறித்து பேச விடாமல் தடை செய்யக் கூடாது.
பொதுக்கூட்டம் மேடை போல இங்கே நடக்காதீர்கள். வெளியில் பேச முடிவு எடுத்துவிட்டீர்கள் என்று கூறி, நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “நேற்றைய தினம் சட்டப்பேரவையில் விதியின்படி அவர்கள் நடந்து கொண்டால் சட்டப்பேரவைகளில் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக நேற்று கூறியதாக செய்திகள் மூலம் எங்கள் கவனத்திற்கு வந்தது.
விதிகளை குறிப்பிட்டு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வையும் மக்களின் உயிர் பிரச்சினையும் இதை 56 விதியின் கீழ் சட்டப்பேரவை விவாதிக்க வேண்டும் என அனுமதி கேட்டோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. விதியை பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்கள். விதியை பின்பற்றினால் அதை மறுக்கிறார்கள். எங்களுக்கான அனுமதியை கொடுக்க அவர்கள் மறுக்கிறார்கள்.
சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையின் ஆழத்தை கருத்தில் கொண்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்கட்சி என்ற முறையில் எங்களுக்கு பிரதான கடமை உள்ளது. நாள்தோறும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் பல பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைவிட முக்கிய பிரச்சினை என்ன இருக்கிறது. மக்கள் பிரச்சினையை விவாதிக்க அனுமதி மறுக்கிறார்கள். விதியின் கீழ் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இது வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மக்களுடைய பிரச்சினையை அணுகவில்லை. நெஞ்சம் பதறுகிறது. பல பேர் இறந்து, குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். பல பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான சூழலில் இந்த பிரச்சினையை கூட அவையில் விவாதிக்கவில்லை என்றால் சட்டமன்றத்திற்கு வந்து என்ன பிரயோஜனம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் என்ன பண்ண முடியம். சபாநாயகர் அரசியல் பேச முற்படுகிறார். அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது நடுநிலையோடு அவர் செயல்படாததை காட்டுகிறது. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுவது முறை அல்ல.