மதுரை : அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட கள ஆய்வுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி கழக செயலாளரிடம் உறுப்பினர் சேர்க்கை குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அதிமுக உறுப்பினர்களான பைகாரா பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் மற்றும் பீபி குளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மேடைக்கு வந்து, பகுதி கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் மேடையில் இருந்து இரண்டு நிர்வாகிகளையும் சிலர் கீழே தள்ளி விட்டு கடுமையாக தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தக் கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்தனர்.
அதன் பிறகு தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். பின்னர், என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை என மேடையில் நத்தம் விஸ்வநாதன் பேசினார். அப்போது நிர்வாகிகள் சிலர் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதாக கூச்சலிட்டனர்.