மதுரை:234 தொகுதிகளையும் சமமாக பார்க்கிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “விவசாயிகளின் நூற்றாண்டு கால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரத்து 400 கோடி செலவில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பயனடையும் வகையில் துவங்கி வைத்தார். இதன் மூலம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
மழைக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டிஎம்சிக்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டுவர இந்த இணைப்பு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காத காரணத்தினால், தமிழக அரசு முழுமையான நிதி ஒதுக்கி காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் கையப்படுத்தப்பட்ட நிலங்களில் 11 கிலோ மீட்டர் கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ரூ.331 கோடி ஒப்பந்தம் செய்யபட்டது. தொடர்ந்து, புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு, வெள்ளாறு வரை 52 கிலோ மீட்டருக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்தை கிடப்பில் போட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
வயிற்றுப் பசிக்கு சத்துணவு திட்டம் இருந்தது போன்று, மாணவர்கள் அறிவு பசிக்கு மடிக்கணினி திட்டம் இருந்தது. ஆனால், அந்த திட்டம் முடக்கப்பட்டது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளும் எனக்கு ஒரே மாதிரி என்று கூறியுள்ளார். தாலிக்கு தங்கம் திட்டம், கறவை பசு ஆடுகள் திட்டம், குடிமாரமத்து திட்டம் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு 234 தொகுதிகளிலும் சமமாக பார்ப்பேன் என்று முதலமைச்சர் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சென்னையில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது; மூன்று பெண்கள் மீட்பு! - SEXUAL WORK CASE IN CHENNAI