சிவகாசி:சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் படித்து வருபவர் காயத்ரி என்ற மாணவி. காயத்ரி தற்போது சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். தாய் தந்தையை இழந்த காயத்ரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், கல்விச் செலவை காப்பகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கல்வியியல் கல்லூரியில் 2 ஆண்டுகள் படிக்க ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்ற சூழலில், போதிய நிதி இல்லாமல் காயத்ரி தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது பிறந்த நாளை காப்பகத்தில் அன்னதானம் வழங்கச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம், தன்னுடைய நிலைமையை எடுத்துரைத்து, கல்வி நிதி வழங்குமாறு கேட்டுள்ளார் காயத்ரி.
அதைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்துக்கு, மாணவி காயத்ரியை வரவழைத்த முன்னாள் அமைச்சர், அவருக்கு கல்வி நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, காப்பகத்தின் நிர்வாகி பாக்கியநாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.