சென்னை:பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீசார் இன்று அதிகாலை திருவேங்கடத்தை அழைத்து சென்றனர்.
அப்போது, திருவேங்கடம் போலீசாரை தாக்கியதாக கூறப்படும் நிலையில், இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருவேங்கடத்தின் என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை என பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர்?:அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், "பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?