சென்னை: போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்க வேண்டும் என்று கூறிய தமிழக காவல்துறை ஆளுநருக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது ஏன் என கேட்டு திமுகவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக மனு செய்துள்ளது.
ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தும் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல் செய்ய பா.ம.க.வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பா.ம.க. அனுமதி கோரியது. ஆனால், ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைதும் செய்தது.காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து பா.ம.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் வழங்கியவர் மன்மோகன் சிங்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
இந்நிலையில், ஆளுநரை கண்டித்து நேற்று (ஜன 06) போராட்டம் அறிவித்த ஆளும் திமுகவுக்கு இன்று (ஜன 07) போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும், எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் பா.ம.க. தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார்.
விதிகளை மீறி போராட்டம் நடத்தும் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனுத்தாக்கல் செய்து, எண்ணிடும் பணிகள் முடிந்ததும் நாளை (ஜன 08) விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.