சென்னை: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரது திருவுருவப் படங்களை திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மேடையில் அவர் பேசியதாவது:
தேசிய மற்றும் மாநில காங்கிரஸுக்கு மாபெரும் தூண்களாக இருந்த இருபெரும் தலைவர்களின் இழப்பு காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமல்ல, எனக்கும் பெரும் இழப்பு. மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இருவரையும் நாம் இழந்திருக்கிறோம்.
மன்மோகன் சிங் உருவாக்கிய பொருளாதார திட்டம் தான் இந்திய நாட்டிற்கு வளர்ச்சியாக அமைந்தது. அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை எண்ணில் அடங்காது. அவரது ஆட்சி காலத்தில் தான் 21 தமிழர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.
மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக இருந்தவர். அவர் ஆட்சி காலத்தில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம், வன உரிமை சட்டம், நில அபகரிப்பிற்கு நிதி வழங்கும் சட்டம், கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் சட்டம், 50 பைசாவில் இந்தியா முழுவதும் பேச முடியும் என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.
மன்மோகன் சிங்கின் இழப்பு தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பு. அவர் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்ட திட்டங்களை எல்லாம் வழங்கினார். தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது மன்மோகன் சிங் ஆட்சியில் தான். மதுரவாயல் பறக்கும் சாலை, சேது சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்க முடியாத ஒன்று. மனதில் உள்ளதை மறைக்காமல் துணிச்சலாக தெளிவாக எதைப் பற்றியும் தயக்கம் இல்லாமல் பேசக்கூடியவர் இளங்கோவன். திமுக ஆட்சி தான் உண்மையான காமராஜர் ஆட்சி என வெளிப்படையாக தெரிவித்தார் இளங்கோவன். எந்தப் பதவியில் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர் இளங்கோவன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.