சென்னை:தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (டிச.9) மற்றும் நாளை (டிச.10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான இன்று கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுரை மாவட்டம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தபுள்ளி கோரியதை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆனால், கனிமம் தொடர்பான சட்டங்களை 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என தெரியவில்லை.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த டங்ஸ்டன் நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் தகவலை இதுவரை வெளியிடாதது ஏன்? எனவும் தெரிவில்லை. டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி எந்த விதமான கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என, சுரங்கத் துறை அமைச்சர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டம் பெரிதாக எழுந்த பிறகு திமுக மக்களை சமாதானம் செய்ய தற்போது தமிழக அரசு எதிர் கடிதம் எழுதியுள்ளது. எனவே மக்கள் போராட்டத்திற்கு பின் தான் திமுக அரசு சுரங்க அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது போல் நாடகம் ஆடுகிறது. இரண்டு முறை பிரதமரை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசினார்.