தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2026-ல் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS Criticized mk stalin
முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 11:10 AM IST

திருச்சி:விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "பொய் சொல்லலாம் ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், "எனக்குத் திறமையில்லை, விமர்சிக்கத் தகுதி இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது" என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் அவர்களின் இளைய சகோதரி மறைவையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்திற்கு சென்று திருவுருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர், திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக, விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்துள்ளார். ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். 2011 முதல் 2021 வரை மிகச் சிறந்த ஆட்சியை அதிமுக தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளார். அதன் பிறகு என் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

திராணியற்ற அரசாங்கம்:ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளோம். அதிமுக ஆட்சியில் சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை. அவற்றை திறக்கக் கூட திராணியற்ற முதலமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதை ரத்து செய்த அரசாங்கம் அதிமுக.

இதையும் படிங்க:மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பணி புறக்கணிப்பு போராட்டம்.. அரசு ஊழியர்கள் தீர்மானம்!

தந்தையின் அடையாளத்தில் பதவி:தேர்தலுக்காகக் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது. ஸ்டாலினுக்கு மக்களை குறித்து கவலை இல்லை. குடும்ப உறுப்பினர்கள் குறித்து தான் கவலைப்படுகிறார். எனக்கு திறமை இல்லை என முதலமைச்சர் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளரான நான் பொதுச்செயலாளர் ஆனதற்கு திறமை தான் காரணம். ஆனால், தந்தையின் அடையாளத்தை வைத்து பதவிக்கு வருவது திறமை அல்ல.

குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி: கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தான் ஜனநாயக கட்சி. உதயநிதி அவர் துறையில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறுகிறார். அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லையா? கருணாநிதி குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிட்டும்.

மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கி எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என கூறும் முதலமைச்சர், சென்னையில் கலைஞர் பெயரால் பன்னாட்டு அரங்கம் தற்பொழுது திறக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு நிதி எங்கிருந்து வந்தது. மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது" என்றார்.

மேலும், அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, "இது கற்பனையான கேள்வி, இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை, அப்படி இருக்கையில் கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது" என்றார். ஒருவர் கூட்டணிக்கு பாமகவையும், பாஜகவையும் வரவேற்கக் கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா? என்று கேள்விக்கு, "அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணிக்காக கதவைத் திறந்து வைத்திருப்பது, மூடி வைத்திருப்பது இல்லை. அது மற்ற கட்சிகளில் தான் உள்ளது".

பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?: ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு எது கூறினாலும் நிற்காது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை புள்ளி விவரங்களோடு துண்டு சீட்டு இல்லாமல் நான் கூறுகிறேன். அதேபோல், ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பேசுங்கள். நீங்கள் போடுகின்ற மேடைக்கு நான் வருகிறேன். நீங்கள் உங்களது திட்டத்தை கூறுங்கள். நான் எங்களது திட்டங்களை கூறுகிறோம். இதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். நாங்கள் தயார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details