சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மருத்துவனைகளி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசவும் விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை என முதல் நாளில் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் அவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தொடர்ந்து சட்டமன்றத்தில் கள்ளகுறிச்சி மரணத்தை பேச அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் சிபிசிஐடி விசாரணை முறையாக நடைப்பெறாது எனக்கூறி சிபிஐ விராணைக்கு உத்திரவிட கோரிக்கை வைத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி- யில் இருந்து சிபிஐக்கு மாற்றவும் சட்டப்பேரவையில் விவாதிக்கவும் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.