சென்னை:எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பின்னர் ஒரு பிளவு, ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் ஒரு பிளவு என தற்போது இருக்கும் அதிமுகவை 3.O என குறிப்பிடலாம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஒரு தேர்தலை மட்டுமே (1989 சட்டமன்றத் தேர்தல்) பிளவுபட்ட அணிகளாக எதிர்கொண்ட நிலையில் ஜெயலலிதா அணியும் , ஜானகி அணியும் அடுத்த தேர்தலில் (1989 மக்களவைத் தேர்தல்) ஒன்றிணைந்தன. ஆனால் தற்போது பிரிவு, சமாதானம், மீண்டும் நீக்கம் என்ற நிலைமையில் இருக்கிறது அதிமுக.
ஆனால் இதனை பிளவு என்றோ பிரிவு என்றோ சொல்லாதீர்கள் அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிட்டோம் என்பது தான் உண்மை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக நிறுவப்பட்டதன் ஆண்டு விழாவை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடினார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுக ஒன்றாக இருப்பதால் தான் தற்போது தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தங்களால் நடத்த முடிகிறது" என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் 6 முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்த அவர், "நீங்கள் குறிப்பிடும் 6 பேரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். இவர்கள் என்னிடம் வந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கச் சொன்னார்கள் என்பது பச்சைப் பொய். நாங்கள் தான் உண்மையான அதிமுக." என குறிப்பிட்டார்.
இது ஒருபுறமிருக்க ஓ.பன்னீர்செல்வம் சென்னை அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியதோடு, தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கி அதிமுக நிறுவன நாளை கொண்டாடினார். பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து , எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். "எடப்பாடி பழனிச்சாமி திருந்துவது போல தெரியவில்லை அவர் திருந்தவும் மாட்டார்" என சாடிய அவர், அதிமுக கட்சிக்குள் ஒற்றுமை ஏற்படாவிட்டால் ஸ்டாலின் தான் முதலமைச்சராக இருப்பார் என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கட்சியில் தற்போதும் இருக்கும் பொன்னையன், செம்மலை போன்ற மூத்ததலைவர்கள் தான் பதிலளிக்க சரியானவர்கள் என கூறிய புகழேந்தி, "அதிமுக தற்போது சர்வாதிகாரியின் கையில் சிக்கியிருக்கிறது" என சாடினார்.
ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில், முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். பின்னர் சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் போர்கொடி தூக்கினார். அதே சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. எனவே யாரும் எதிர்பாராத விதமாக சசிகலாவின் ஆதரவுடன் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவிக்கு வந்தார்.
சசிகலா சிறை சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர் தனபால், இதனால், 2019ஆம் ஆண்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்கு வைக்கப்பட்ட பரிட்சையாகவே பார்க்கப்பட்டது.
அந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் பெரும்பான்மை கிடைத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்கவைத்த போதிலும் அதிக தொகுதிகளில் வென்ற தாங்களே உண்மையான வெற்றியாளர் என திமுக கூறியது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கடுமையான ஒரு தோல்வியை எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 19.39% வாக்குகளை மட்டுமே பெற்றதோடு ஒரே ஒரு மக்களவைத் தொகுதியாக தேனி யில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிமுகவின் தொடர் தோல்விகள்:இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தோல்வி ஆகியவற்றால் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்ற அதிருப்தி அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 33.29% வாக்குகளைப் பெற்று 66 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 20.46% வாக்குகள் மட்டுமே பெற்று போட்டியிட்ட 34 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி 10 சதவீதம் குறைந்திருக்கிறது என்பதையும் எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் 46 % அளவுக்கு அதிமுக வாக்குவங்கியை இழந்திருக்கிறது. குறிப்பாக 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காத போதிலும் அதிமுக 32.6% வாக்குகளை பெற்றிருந்ததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிமுகவுக்கு இந்த சரிவு எதனால் என்ற கேள்விகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான செம்மலையிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது. இதற்கு பதிலளித்த அவர்," வாக்கு சரிவு ஒப்பீட்டை, சில ஊடகங்களிலும், சிலரும் சரியாக கணித்து சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை சட்டமன்ற தேர்தல் வாக்குகளோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. உதாரணமாக, 2011ம் தேர்தல் 2016 சட்ட மன்ற தேர்தல் வாக்குகளையும், வாக்கு சதவீதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
அதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையவும் இல்லை, வாக்குப் பிரியவும் இல்லை, வாக்கு சரியவும் இல்லை என கூறிய அவர், இன்னும் கூறப்போனால் எங்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான வாக்குகள், குறைவாக இருப்பதை ஒத்துக்கொள்கிறோம் என்றாலும், இந்த புள்ளி விவரங்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என கூறினார்.
"டெல்லியில் எந்த கட்சி ஆட்சிக்கு அமைய வேண்டும் என்பதற்கு ஏற்ப மக்கள் வாக்கு அளிக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவும் அமைகிறது. இரண்டு தேசிய கட்சிகளையும் அதிமுக சம நிலையில் தான் பார்க்கிறது. நாங்கள் எந்த தேசிய கட்சியோடு கூட்டணியிலும், தோழமையிலும் இல்லை.. இரண்டு கட்சிகளுமே நாணயத்தில் இரண்டு பக்கங்களை போல் பார்க்கிறோம்" எனவும் செம்மலை பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் தற்போதைய நிலை என்ன?:தற்போது இரட்டை இலை சின்னத்துடன் அதிகாரப்பூர்வமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற தனி கட்சி என அதிமுக பிளவு பட்டுக் கிடக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திக் கூறி வருகிறார். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற பழமொழி அதிமுகவுக்கும் பொருந்துமா என்ற கேள்விக்கு கட்சியின் 53 வது பிறந்த நாளான இன்று வரை பதில் இல்லை.