சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) தமிழக அரசின் வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், ஒரு கிராமம் ஒரு பயிர் போன்ற புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.
அதே போல் வேளாண்மைப் பொறியியலை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி:பொதுவாக விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும் போது, அங்குப் பாம்புக் கடி, விஷப் பூச்சிக் கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது கிணறுகளுக்குச் செல்லாமலே மின்சார இணைப்பு பம்பு செட்டுகளை இயக்க முடியும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி.
இதன் மூலம் எங்கிருந்தாலும், கைப்பேசியின் வாயிலாகப் பம்பு செட்டுகளை இயக்கவும் கண்காணிக்கவும் முடியும். இந்த கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகளை 10 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில், 50 சதவீத மானிய அடிப்படையில், அதிகபட்சமாக 7 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்பட உள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!