ஈரோடு :ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வர்கூர் அருணாசலம் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்த மாவட்டம் ஈரோடு. இந்த மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களும் கடந்த அதிமுக ஆட்சியில் தான் வழங்கபட்டது.
திமுக அரசு வந்த மூன்று வருடத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுகவில் இருப்பதே நமக்கு பெருமை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக. குறிப்பாக ரூ.1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை பெற்று தந்தது அதிமுக தான். காவேரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். இலங்கை தமிழர், கச்சத்தீவு பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று உள்ளோம்.