சேலம்:சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் "அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக பெங்களூரு புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் சரவணன் கூறுகையில், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் அவதூறாகவும், அநாகரிகமாகவும் இணையதளங்களில் பேசி வருகின்றனர்.
இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் மீது காழ்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளனர். இது போன்ற வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என தெரிந்தும் அதனை வீடியோவாக வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்.