தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயநாடு நிலச்சரிவு: திரையுலகில் முதல் நபராக உதவிக்கரம் நீட்டிய விக்ரம்! - Vikram fund for wayanad landslide - VIKRAM FUND FOR WAYANAD LANDSLIDE

Vikram fund for wayanad landslide: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் விக்ரம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 20 லட்சம் வழங்கியுள்ளார்.

விக்ரம், வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி புகைப்படம்
விக்ரம், வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 12:13 PM IST

சென்னை: கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல்மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவம், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிரபல நடிகர் விக்ரம் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதனை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் போது தெரிவித்திருந்தார்.

மேலும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவருமான விஜய் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு பிரார்த்தனை செய்கிறேன். களத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஏஜென்ஸிஸ் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு எனது வணக்கங்கள்" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கம் மூலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாள நடிகர்கள் மம்மூட்டி, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்து கேரளா அரசு வெளியிட்டுள்ள அவசர உதவி எண்களை பகிர்ந்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்! - vijay kerala landslide

ABOUT THE AUTHOR

...view details