சென்னை:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். நடிப்பு மட்டுமின்றி தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக தனது மக்கள் இயக்கத்தினை அரசியல் நகர்வை நோக்கி நகர்த்தி வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியது மற்றும் அவர் நீண்ட நேரம் நின்று மாணவர்களுக்கு பரிசளித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அதேபோல், தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில், குறிப்பாக கிராமங்களில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'தளபதி விஜய் பயிலகம்' எனும் இரவு நேர பாடசாலை திட்டம், பல்வேறு பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை மையம், 'தளபதி விஜய் நூலகம்' எனும் நூலகம் ஆகியவை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திறக்கப்பட்டன.
மேலும், மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் ஆகிய விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் வழங்கப்பட்டன.