தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்!

Puducherry girl murder case: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Puducherry girl murder case
Puducherry girl murder case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:38 AM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போனதாகத் தேடப்பட்ட 9 வயது சிறுமி, மூன்று நாட்களுக்குப் பின் மார்ச் 5ஆம் தேதி மதியம் அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் காவல்துறை அலட்சியமாக இருப்பதாகவும், சிறுமியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பத்தில் 19 வயது இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கருணாஸ்(19), விவேகானந்தன்(59) ஆகிய இருவரும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் சீண்டல் அளித்து, கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்ற உத்தரவின்படி காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள முத்தியால்பேட்டை போலீசார் திட்டமிட்டனர். அதற்காக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சோபனா தேவி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதனை அடுத்து, 2 பேரையும் திங்கட்கிழமை (மார்ச்.18) மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோரிமேடு ஆயுதப்படை மைதானம் அருகிலுள்ள ஒரு அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா மற்றும் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி கலைவாணன் ஆகியோர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது, சிறுமியைக் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தது, கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா போன்ற பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியை எப்படிக் கடத்திச் சென்றனர் என்பதையும் நடித்துக் காண்பிக்க வைத்து, அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, சிறுமி கொலை வழக்கு மீதான விசாரணையில், இதுவரை வெளிவராத சில அதிர்ச்சி தரும் தகவல்களைக் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர், 2 நாட்களிலேயே விசாரணையை முடிந்ததையடுத்து, நேற்று (புதன்கிழமை) மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெட்டிக்கடை நடத்தி வந்த நபர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details