ஈரோடு: ஈரோட்டில் ஆற்றல் அறக்கட்டளை என்ற பெயரில் சமூக சேவை செய்து வரும் அசோக் குமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அசோக் குமார் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த போது, தேர்தல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் அளித்துள்ள சொத்துப் பட்டியலில் தனது மற்றும் மனைவி பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் என 653 கோடி ரூபாய் கணக்கு காண்பித்துள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மத்தியில் பேசு பொருளான நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கராவிடம் கூடுதலாக இரண்டாவது முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வேட்பாளர் அசோக் குமார், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான். அப்போது பொருளாதாரத்தில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். படிப்பு, கடுமையான உழைப்பு, சமுதாய ஒத்துழைப்பு காரணமாகத்தான் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
இதற்கு சமுதாயத்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் சமூக சேவை ஆற்றி வருகின்றேன். நான் தொகுதிக்காக செய்யவில்லை, ஊருக்காக செய்து வருகிறேன். அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், மக்களை பார்த்துக் கொண்டால் விரைவில் நாடு வளர்ச்சி அடைந்துவிடும். எனது சொத்துப் பட்டியல் குறித்து பட்டியலிட்டு காண்பித்து உள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக உழைப்பு, உழைப்பு என்ற அடிப்படையில் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனது தாயார், தந்தை கல்லூரி பேராசிரியர்களாக இருந்தனர். படிப்புக்கு முன்னுரிமை அடிப்படையில் எனது தாய், தந்தை என்னை இந்த முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளனர்” என்றார்.