திருவள்ளூர்: ஆடி கிருத்திகையன்று விரதமிருந்து வழிபட்டால், முருகன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். அந்த வகையில் திருத்தணி முருகன் கோயிலில், இன்று ஆடி கிருத்திகை திருவிழா களைகட்டியது. அதாவது, முருகனின் 5ம் படை வீடாகப் போற்றப்படும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வாய்ந்த ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா கடந்த சனிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் கோலாகலமாகத் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, 3ம் நாளான இன்று ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே, முருகப்பெருமானுக்குக் காவடி செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து, விடிய விடிய காத்திருந்து வழிப்பட்டனர். தற்போது, திருத்தணி முருகன் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மலைக் கோயிலில் குவிந்துள்ளனர்.
அதனால், கந்தனுக்கு அரோகரா கோஷத்துடன் காவடிகளின் ஓசைகளும், அரோகரா முழக்கங்களும் பம்பை, உடுக்கை முழங்க பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிகளுடன் முருகனின் பக்தி பாடல்களுடன் பரவசம் பொங்க, மலைக் கோயிலில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர்.