சென்னை:ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் பள்ளி திறக்கும் ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இன்று (மே 29) அறிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, உறைக் காலணி, காலுறைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்.
குறிப்பாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.