வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வி. எஸ். கே காலணி பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்ற நிலையில், இந்த கோவில் திருவிழாவிற்கு கோணாமேடு, காமராஜபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்கு திருவிழாவில் நடனமாடுவது தொடர்பாக கோணாமேடு மற்றும் காமராஜபுரம் பகுதி இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோணாமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த அப்பு (எ) சந்துருவை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துருவை மீட்ட அப்பகுதி இளைஞர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சந்துருவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காமராஜபுரம் பகுதி இளைஞர்கள் கோணாமேடு புத்தர் நகர் பகுதியில் உள்ள வீடுகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்களை அடித்து நொறுக்கி, இளைஞரை கத்தியால் குத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படும் என உறுதியளித்தின் பேரில் 3 மணி நேரத்திற்கு மேல் போராடிய பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இருவர் கைது:மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்துருவை கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த ஜானை வாணியம்பாடி தனிப்படை காவல்துறையினர் சேலத்தில் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதர், கார்த்திக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சந்துருவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு காமராஜபுரம் பகுதியில் உள்ள சந்துருவின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, சந்துருவின் உடலுக்கு அவரது உறவினர்கள் சடங்குகள் செய்து காமராஜபுரம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க:தமிழக வெற்றிக் கழகம் மாநாடு எப்போது? - கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின் விஜய் கூறிய தகவல்