தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்லும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்ற மாதம் பென்னாகரம் அருகே ஒரு கும்பலை பிடித்த சுகாதாரத்துறை அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மகேந்திரமங்கலம் அடுத்த சிங்கேரி கூட்ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்களை குறி வைத்து அவர்களை அணுகி கருவில் உள்ள சிசு பாலினம் கண்டறிந்து பணம் வசூலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், சுகாதார மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிங்கேரி கூட்ரோடு பகுதியில் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர். அப்போது, சாலையோரம் இருந்த வீட்டில் கர்ப்பிணி பெண்கள் செல்வதை கவனித்த சுகாதாரத் துறையினர் சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளே சென்று இருவரை பிடித்தனர்.
அப்போது இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்டவர்களில் தருமபுரி இலக்கம்பட்டியை சேர்ந்த கற்பகம் (நா்சிங் டிப்ளமோ படித்துள்ளார்) மற்றும் வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்தது.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை, ஜோதி ஆகிய இருவர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். சட்டவிரோத கும்பலிடம் இருந்து ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மகேந்திரமங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்து மேலும் தப்பி ஓடிய இருவர் குறித்து வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களை குறி வைத்து இதுபோன்ற கும்பல் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என அறிந்து சொல்லும் சட்ட விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க:உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!