சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 நபர்கள் கடந்த மாதம் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்த நிலையில், மூன்று நாள் வேலை முடிந்தபின் வேலை இல்லாததால் அவர்களது சொந்த ஊருக்கே செல்வதற்காக கடந்த 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
ஆனால், அவர்களில் 5 பேர் மட்டும் ஊருக்கு செல்லாமல் கடந்த 16ஆம் தேதி காலை வரையில் உண்பதற்கு உணவுகூட இல்லாமல், சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையிலேயே தங்கி இருந்துள்ளனர். மேலும், அவர்கள் 5 பேரும் உணவு இல்லாமல் பட்டினி கிடந்ததால் மயங்கி விழுந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், மயங்கி விழுந்த ஐந்து நபர்களையும் மீட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணையில், பட்டினி கிடந்து மயங்கி விழுந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மங்ருல் என்ற பகுதியைச் சேர்ந்த சமர்கான் (35), மாணிக் கோரி (50), சத்யா பண்டிட் (33), ஆசித் பண்டிட் (35), கோனாஸ் ஸ்மித் (52) என தெரிய வந்துள்ளது.