திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49), வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார். அதே வேனில் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேன் வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் சேமலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சேமலையப்பன் ஸ்டேரிங்கில் மயங்கி சரிந்ததை கண்ட மாணவர்கள் மற்றும் மனைவி லலிதா ஆகியோர் அலறினர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேனில் ஏறி பார்த்துவிட்டு உடனடியாக சேமலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.