ஈரோடு:நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர், பவானி, அந்தியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் காவலர்கள் 2154 பேர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 21 பேர் என மொத்தம் 2175 நபர்கள் தேர்தல் நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆகவே, இந்த 2175 நபர்களும், தங்களது வாக்கினைத் தபால் மூலமாகச் செலுத்தும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
அவர் முன்னிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த காவலர்கள் வரிசையில் நின்று தங்களது தபால் வாக்கினைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு, இன்று மற்றும் நாளை தபால் வாக்கினைப் பதிவு செய்யலாம். இதில் காவல்துறையினர் 2154 பேரும், தேர்தல் பணியாளர்கள் 21 பேரும் என மொத்தமாக 2175 பேர் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
மேலும், இது வரை ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 4314 பேர் தபால் வாக்களித்துள்ளனர். இது வரை மொத்தமாக 5 கோடியே 19 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு, 2.66 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் சம்மந்தமாக, சி விஜில் மூலம் 68 புகாரும் மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் மூலம் 44 புகாரும் வந்துள்ளன. அவைகள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 1476 வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 230 நுண் பார்வையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 1688 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள 4656 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2028 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2190 விவிபேட் ஆகியவற்றில் சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்'.. திமுக விளம்பரம் தடை விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடிய திமுக!