சென்னை: இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் இருந்து சுமந்து சென்று, மரணித்தவர்களின் சொந்த ஊர்களில், அவர்களின் சொந்த, பந்தங்களில் அவர்களின் உடலை ஒப்படைக்கும் அர்பணிப்பான பணியை தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் இதுவைர 13 லட்சத்து 98 ஆயிரத்து 556 உடல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமந்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 320 உடல்களையும், நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை 39 ஆயிரத்து 840 உடல்களையும் சுமந்து சென்றுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக அனுப்பி வைப்பதற்காக இலவச அமரர் வாகனம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த வாகனம் தேவைப்படுவர்கள் 155377 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டால் ஊர்தி இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 194 அமரர் ஊர்தி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் வரையில் மட்டுமே, 39 ஆயிரத்து 840 உடல்கள் மருத்துவமனையில் இருந்து, அவரவர்களின் உறவினர்களிடம் சேர்த்துள்ளது.
சேவை எப்படி வழங்கப்படுகிறது?:இந்த இலவச அமரர் ஊர்தி சேவையை அரசுடன் இணைந்து வழங்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ (GVK EMRI) நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேலாளர் ரமேஷ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சென்னை மாவட்டத்தில் இலவச அமரர் ஊர்திக்கு 24 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 155377 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்வார்கள். அதன் பின்னர் இறந்தவர்களின் உறவினர்களிடம் மருத்துவமனை உடலை ஒப்படைப்பதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு வருவதற்குள் வாகனத்தை ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் வைத்திருப்போம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கு உடலை கொண்டு செல்வோம். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் மாநில எல்லை பகுதியில் 100 கி.மீ தூரத்திற்கு இலவசமாக உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கி வேலைச் செய்பவர்கள் இறந்து விட்டால் அவர்களின் உடலைபதப்படுத்தி, ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.