தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து பிரச்னையில் சித்தப்பாவை வெட்டிக் கொலை செய்த மகன் கைது.. நெல்லையில் பகீர் சம்பவம்! - a son was arrested - A SON WAS ARRESTED

திருநெல்வேலியில் சொத்து பிரச்னையில் சித்தப்பாவை வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட இசக்கி பாண்டி, உயிரிழந்த சீனிவாசன்
கைது செய்யப்பட்ட இசக்கி பாண்டி, உயிரிழந்த சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 4:24 PM IST

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட ஒப்பந்தக்காரரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகளும், இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது மனைவியின் வீட்டில் ஆறுமுகம் வசித்து வருகிறார். ஆறுமுகத்திற்கு சொந்தமான இடங்களை தனது மகன்கள், மகளுக்குப் பிரித்துக் கொடுப்பதென முடிவு செய்து அதற்கான பணிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் முதல் மனைவியின் மகனான சுப்பிரமணியன் விபத்து ஒன்றில் உயிரிழந்த சூழலில் சுப்பிரமணியனின் மூன்று மகன்களுக்கும் ஆறுமுகம் தனது இரண்டாவது மனைவிகளின் பிள்ளைகளின் ஒப்புதலோடு சொத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆறுமுகத்தின் முதல் மனைவி மகனான உயிரிழந்த சுப்பிரமணியனின் மகன்களுக்கும், ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் 2வது மகன் சீனிவாசனுக்கும் இடையே சிறு சிறு பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கட்டிட பெயிண்டிங் தொழில் செய்து வரும் சீனிவாசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். எனவே தூத்துக்குடியில் நடந்து வரும் கட்டிட பணி தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்வதால் சீனிவாசன் தனது மனைவியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க :தம்பியை கிண்டல் செய்ததால் சக மாணவனை பிளேடால் கீறிய மாணவன் கைது!

இந்நிலையில் பணி முடிந்து தூத்துக்குடியில் இருந்து ராமாயன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் வீட்டில் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த சுப்பிரமணியனின் மூத்த மகன் இசக்கி பாண்டி கையில் வைத்திருந்த அரிவாளால் சீனிவாசனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய இசக்கி பாண்டியை பிடித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கி பாண்டியனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொத்து பிரச்னையில் சொந்த சித்தப்பாவையே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details