திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாகத் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு கடந்த பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டது.
ஆனால் அதிலிருந்து நிதிஷ்குமார் வெளியேறி இருப்பது காங்கிரஸைக் கலக்கமடையச் செய்துள்ளது. எனவே பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்போடு தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்தார்.
பாஜக தலைமையும் அவரது விருப்பத்துக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. எனவே முழு நம்பிக்கையோடு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல் ஆளாக முந்திக்கொண்டு தேர்தல் அலுவலகத்தை நயினார் நாகேந்திரன் திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கட்சித் தலைமை வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே தாமாக முந்திக் கொண்டு நல்ல நாள் நேரம் பார்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரது நம்பிக்கை படியே கட்சி அவருக்கு வாய்ப்பும் கொடுத்தது. எனவே, இந்த முறையும் எப்படியும் தனக்கு எம்.பி சீட் கிடைத்து விடும் என்பதில் நயினார் நாகேந்திரன் உறுதியாக உள்ளார். இதுபோன்ற சூழலில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா சார்பில், திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டரில், புறக்கணிக்காதே..! புறக்கணிக்காதே..! வெள்ளாளர்களைப் புறக்கணிக்காதே..! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர் சமுதாயத்தை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட்டா? வெள்ளாளரே விழித்துக் கொள்.
திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் எச்சரிக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார். சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் அலுவலகம் திறந்த சில நாளிலேயே நயினார் நாகேந்திரனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது திருநெல்வேலி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை! குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை!