தேனி: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (43). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 15 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, அவரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அச்சிறுமியை கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் சிறுமியை மீட்ட காவல் துறையினர், சிறுமியிடம் திருமண ஆசை கூறி, சட்ட விரோதமாக திருமணம் செய்த கிருஷ்ணன் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ உள்ள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தவைகையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) வந்த போது, கிருஷ்ணன் மீதான குற்றங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்தது.
இதையும் படிங்க:சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
மேலும், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 366 பிரிவின் கீழ், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம், மற்றும் அதைக் கட்டத் தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தது. மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கடும் காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், 2006 குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 9ன் கீழ் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என மூன்று பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை காலத்தை குற்றவாளி ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குற்றவாளி கிருஷ்ணனை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி; விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!