மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதிபாசு(32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ள நிலையில், ஜோதிபாசுவின் மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் ஜோதிபாசு, நேற்று (ஜூலை 09) மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் குடித்துவிட்டு, தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மதுபானம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில், தான் வாங்கிவந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு, பூச்சி மருந்து கலந்த பாதி மதுபானத்தை அங்கேயே வைத்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு(24) என்பவர் பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசு வைத்திருந்த மதுபானத்தை வாங்கி குடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்ததாகவும், ஏற்கனவே மது போதையில் இருந்த ஜெரால்டு, ஜோதிபாசுவின் பேச்சைக் கேட்காமல் பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, மது போதையில் இருந்த இருவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், அதே பகுதியிலேயே ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.