திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்முகமது (46) என்பவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காணவில்லை என அம்மாவட்ட காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ்முகமது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று கரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், வாலாஜா அருகில் சுற்றித்திரிந்த போது, அவரை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, ராஜ் முகமது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், உடனடியாக அவரை மருத்துவர்கள் திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.
பின்னர், அங்கு ராஜ் முகமதுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் சற்று மனநலம் தேறிய நிலையில், அவரிடம் அவரது சொந்த ஊர் குறித்து மனநல காப்பாளர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், கந்தகல் கிராமம் என தெரிவித்துள்ளார்.