திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சேர்ந்தவர், சுடலை. இவரது மகன் இசக்கிமுத்து(35) இவர் கட்டிட தொழிலாளியாக பணி செய்து வந்தார். இசக்கிமுத்து தற்போது நெல்லை பாளையங்கோட்டை, சாந்தி நகர் அடுத்த திம்மராஜபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் ஏற்கனவே மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவ்வப்போது கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் கடந்த சில நாட்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது தாயுடன் தினசரி கட்டிட வேலைக்கு செல்வதை இசக்கிமுத்து வழக்கமாக செய்து வந்துள்ளார். அந்த வகையில், நேற்றிரவு பணியை முடித்து விட்டு தாயும், மகனும் முன்னும் பின்னுமாக வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
பாளையங்கோட்டை அடுத்த சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே வந்தபோது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென இசக்கி முத்துவை வழிமறித்து அரிவாளால் தலை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், இசக்கிமுத்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த இசக்கிமுத்துவின் தாய் கண் முன்னே தனது மகன் வெட்டி சாயக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், செய்வதறியாது அங்கு கூச்சலிட்டுள்ளார்.