சென்னை: சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் நபர்களைக் கண்காணிக்கும் பணியில் போலீசார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெருநகர விபச்சார தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டைக் கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
அந்த விசாரணையில், சந்தோஷ் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சந்தோஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மீட்கப்பட்ட 4 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜன், மணி, ரவி, சீனிவாசன், மோகன் உட்பட 12 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.15,850 மற்றும் 6 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் பழையவண்ணாரப்பேட்டை ராமானுஜம் தெருவில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தை கண்காணித்து, அங்கு பணம் வைத்து சீட்டுக் கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளமாறன், ஜெயராமன், சுந்தரமூர்த்தி, கல்யாணசுந்தரம், முருகதாஸ் உட்பட 11 நபர்களை கைது செய்தனர்.