நீலகிரி:இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கேரள வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்கு வரத் துவங்கியுள்ளது.
இத்தகைய சூழலில், ஸ்ரீ மதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஆட்கள் இல்லாத வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய நிலையில், வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சுமார் ஏழு மணி நேரத்திற்கு மேலாக சிறுத்தையை எவ்வாறு பிடிக்க வேண்டும் என வனத்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.