ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் மேம்பாலத்தின் மீது பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை - பெங்களூர் செல்லும் சாலையில் இருபுறமும் செல்லும் வாகனங்களை ஒரு வழிச்சாலையின் நடுவில் தடுப்புகள் வைத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனின் கணவர் பத்மநாபன், தனது காரில் ஆம்பூரில் இருந்து மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார், அங்குள்ள வளைவில் திரும்பிய போது வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் ஒருபுறம் நொறுங்கிய நிலையில் கார் மற்றும் அரசுப் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நேரத்திற்கு பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து மாற்றுப் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தேசிய நெடுஞ்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், ஒருவழியாக இருபுறமும் வாகனங்கள் செல்லும் போது வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:"ஆருத்ரா விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு?" - சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு!