சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி விஜயா (78). கூலித்தொழில் செய்து வந்த இவர், கடந்த ஜூலை 17ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பாததை அடுத்து, அவரது மகள் லோகநாயகி என்பவர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
அதனை அடுத்து, கடந்த 19ஆம் தேதி தனது தாயார் விஜயாவை காணவில்லை என எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகார் அளித்தார். அதில், "கடந்த ஜூலை 17ஆம் தேதி வீட்டில் நான் வேலைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் விஜயாவை காணவில்லை. அவர் ஹோட்டல் வேலைக்குச் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
அவர் வீட்டில் இருந்து சென்ற போது, வெள்ளை நிற பூ போட்ட புடவை, கழுத்தில் பால்நிற மணி மற்றும் காதில் ஒரு சவரன் கம்மல் போட்டு இருந்தார். மேலும், அவரது சுருக்குப் பையில் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை வைத்திருந்தார் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன விஜயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, கடந்த ஜூலை 23ஆம் தேதி விஜயாவின் வீட்டின் அருகே வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், அவர் வீட்டை காலி செய்து விட்டதாகக் கூறப்பட்டது.
அதன் பின்னர், சந்தேகம் அடைந்த போலீசார் பார்த்திபனின் செல்போன் டவர் சிக்னலை வைத்து தேடி வந்தனர். அதில், அவர்கள் விருதுநகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு பார்த்திபன்- சங்கீதா தம்பதியை கைது செய்தனர்.
இது குறித்து சென்னை எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, தி.நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் விருதுநகருக்குச் சென்று அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, மூதாட்டி விஜயாவை பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா கொலை செய்து, உடலை மூட்டை கட்டி வீசியதாகவும், அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.