தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரியில் மீண்டும் ஒரு ஜாதிய மோதல்..! காவல்துறையினர் கூறுவது என்ன? - Communal Clash in School Students

Communal Clash in Nanguneri: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் ஜாதிய ரீதியாக மோதிக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 12:37 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவரை ஜாதிய வன்மம் காரணமாக சக மாணவர்களே அவரது வீடு புகுந்து அரிவாளால் மிக கொடூரமாக தாக்கிய சம்பவம், கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, கடும் தாக்குதலுக்கு ஆளான சின்னதுரை சுமார் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் அதிக மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டையும் பெற்றார் ஜாதிய வன்மத்தால் தாக்குதலுக்கு உள்ளான சின்னத்துரை கல்வியின் மூலம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய முன்தினம் (ஜூலை 01) பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து, போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், அப்பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் பயின்று வருவதாகவும், அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஜாதி வன்மத்துடன் அணுகியதாகவும், இதனை தட்டிக்கேட்க வேறொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை, ஜாதிய வன்மத்தை கடைப்பிடித்த மாணவர்கள் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோதலில் 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிகிச்சையில் இருந்த 2 மாணவர்கள் உள்பட மொத்தம் 9 மாணவர்களை கைது செய்து அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும், வரும் 15ஆம் தேதி வரை அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கடந்த ஒருவருடமாகவே மாணவர்களுக்கிடையே மோதல்கள் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் இது ஜாதிய மோதலாக இல்லை. பிறகு நாளடைவில் மாணவர்களுக்கு இடையிலான மோதல், ஜாதிய ரீதியான மோதலாக உருவெடுத்துள்ளது.

தற்போது இச்சம்பவத்தில் 9 பேரை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளோம். சின்னத்துரை சம்பவத்திற்குப் பிறகு பள்ளிகளில் ஜாதிய மோதலை தடுக்க சுமார் 260 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம்" என்றார்.

இதற்கிடையில் மருதகுளம் பகுதியில் ஜாதிய மோதலை தடுக்க நேற்று (ஜூலை 02) நாங்குநேரி டிஎஸ்பி பிரசன்ன குமார், மருதகுளம் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது பேசிய டிஎஸ்பி, "மாணவர்கள் என்றும் ஜாதி, மத வேறுபாடுகளை பார்க்கக்கூடாது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற சிந்தனையோடு பேசி பழக வேண்டும். ஜாதி, மதம் அடையாளங்களை அணிந்து பள்ளிகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுரை வழங்கினார்.

என்னதான் அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட மாணவர்கள் அதை பின்பற்றுவதில்லை. எனவே மாணவர்களிடையே ஏற்படும் ஜாதிய மோதலை தடுக்க நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:சென்னை மின்சார ரயிலில் வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கை கைது!

ABOUT THE AUTHOR

...view details