நீலகிரி: கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் நடக்க முடியாமல் சோர்வடைந்து வனப்பகுதியில் படுத்துக் கிடப்பதாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரியவே, விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். அப்பொழுது, தாய் யானையுடன் ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது.
தாய் யானை சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குச் செல்லும் நேரத்தில், ஆண் குட்டி யானை அதனை விட்டுப் பிரிந்து சென்றது. பின்னர், ஆண் குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் போராடினர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி அந்த ஆண் குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்து வந்தனர். அங்கு அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.