தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு வயதில் இயக்குநராகி 7ஆம் வகுப்பு மாணவி சாதனை.. யார் இந்த சேலம் இளம் இயக்குநர்?

Salem young Director: சேலத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி "கமலியின் எதிர்காலம்" என்ற முழு நீள திரைப்படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 11:51 AM IST

A 7th grade government school girl in Salem has directed and acted in film
சேலத்தில் 7ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி திரைப்படத்தை இயக்கி நடித்து சாதனை

சேலத்தில் 7ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி திரைப்படத்தை இயக்கி நடித்து சாதனை

சேலம்:சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர், பிரசாத். திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் முதல் மகளான பிரஹிமா (11), பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையுடன் இணைந்து திரைப்படம் எடுக்கும் இடத்திற்குச் சென்று வரும் பிரஹிமாவுக்கு, திரைப்படம் இயக்கும் ஆசை வந்துள்ளது.

இதனைத் தந்தையிடம் தெரிவித்தபோது, அவர் சினிமா குறித்தும், படம் இயக்குவது குறித்தும் கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரஹிமா 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வை படமாக்க வேண்டும் என தந்தையிடம் கூறியுள்ளார். மகளின் கதையைக் கேட்ட பிரசாத், கதைக்களம் நன்றாக இருந்ததால், தானே முன்வந்து படத்தை தயாரிப்பதாக மகளிடம் உறுதி அளித்துள்ளார்.

அதன்படி, மாணவி பிரஹிமா "கமலியின் எதிர்காலம்" என்ற தலைப்பில், முழு நீளப் படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதையும், அவரை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதற்காக சக நண்பர்கள் முன்னெடுக்கும் முயற்சியையும் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் இயக்கிய அனுபவம் குறித்து பள்ளி மாணவி பிரஹிமா கூறுகையில், "இந்த தருணத்தில் படம் எடுக்க எனக்கு உதவியாக இருந்த என் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது படத்தைப் பார்த்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் திரைப்படத்தைக் காட்சிப்படுத்த வேண்டும். எனது படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பிரஹிமாவின் தந்தை பிரசாத் கூறுகையில், "எனது மகளை சிறிய வயதிலேயே அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. சிறிய வயதில் எனது மகளை இயக்குநராக ஆக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். ஆனால், இது உலக சாதனை என்பது எனக்குத் தெரியாது. நான் படங்களில் துணை இயக்குநராக பணியாற்றும்போது, குறும்படங்கள் இயக்கும் இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பயிற்சி கொடுப்பேன்.

பின்னர் படத்திற்கான கதையை தயார் செய்து என்னிடம் கூறினாள். அதனை வைத்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த கமலியின் எதிர்காலம். இந்தப் படத்திற்காக பலரும் எங்களுக்கு உதவியுள்ளனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெளியிடுவதற்கு எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி மாணவர்கள் இந்த படத்தை முக்கியமாக பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். எனவே, இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து, என் மகளுக்கு அங்கீகாரம் வழங்கி, விரைவில் இந்த திரைப்படத்தினை வெளியிட்டு, பள்ளிக் குழந்தைகள் இதனை பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முழுமையான நோக்கம்.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரைச் சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முழு நீளப் படத்தை உருவாக்கி, அதில் நடித்து சாதனை படைத்துள்ள நிகழ்வு, எதிர்கால தலைமுறையின் விடா முயற்சியினையும், குறிக்கோள் நிறைந்த பாதையையும் வெளிக்காட்டும் வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க:தேசிய முதியோர் நல மருத்துவமனையை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details