திருநெல்வேலி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்த விழாவின் மிக முக்கியமான அம்சமாக திகழ்வது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவதாகும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நவராத்திரி பண்டிகை, கடந்த 3ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இப்பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொலு பொம்மைகளை தங்களது வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டிற்காக வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி அவற்றில் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் மற்றும் பொம்மைகளை கொலுவாக வைத்து வழிபடுவது வழக்கம்.
ஆனால், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கொலுவிற்காக தங்களது ஒட்டுமொத்த வீட்டையும் அர்ப்பணித்து, வீடு முழுவதும் எங்கு திரும்பினாலும் கொலு பொம்மைகளாக காட்சியளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக நவராத்திரியை கொண்டாடி வருகிறனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மரகதம் மற்றும் அவரது மகன் மாரியப்பன். இவர்கள் நவராத்திரி திருவிழாவிற்கு கொலு வைத்து வழிபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு கடந்த 49 ஆண்டுகளாக, நவராத்திரி நிகழ்வின்போது மற்றவர்களைபோல அல்லாது, சற்றே வித்தியாசமாக தங்களது வீடு முழுவதையும் கொலு வைப்பதற்காக அர்ப்பணிக்கின்றனர்.
இதுகுறித்து மரகதம் மற்றும் அவரது மகன் மாரியப்பன் கூறுகையில், "இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா தொடங்கியதும் கடந்த 3ஆம் தேதி அமாவாசை தினத்தில் அம்மன் பூஜையோடு எங்களது வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகிறார். சுமார் 5000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இந்த நவராத்திரி விழாவில் எங்கள் வீட்டை அலங்கரித்துள்ளது.
இதற்காக கடந்த ஒரு மாத காலம் காலமாக வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீட்டினை சுத்தம் செய்து, கொலு பொம்மைகளை வைத்து வழிபடுகிறோம். வீட்டின் நுழைவாயில் தொடங்கி வீட்டின் கடைசி அறை வரையில் ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் வகையில் கொலு பொம்மைகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயம் சார்ந்த பொருட்களையும் வைத்துள்ளோம். மேலும், சிறுதானிய உணவுகள் ஆரோக்கியமானவை என்பதால் பிரத்யேகமாக சிறுதானியங்களை கொண்ட சிறிய குடில் வீட்டை அமைத்து கொலுவில் வைத்துள்ளோம்.
இதையும் படிங்க: வீடுகளை அலங்கரிக்க தயாராக இருக்கும் அதியமான்கோட்டை கொலு பொம்மைகள்.. நவராத்திரியை கொண்டாட ரெடியா?
இதுமட்டும் அல்லாமல் எங்கள் வீட்டிற்கு அனைத்து மதத்தினரும் கொலுவை பார்வையிட வருவதால் எம்மதமும் சம்மதம் என்ற வாக்கியத்திற்கேற்ப இயேசு கிறிஸ்து சிலை, இஸ்லாமியர்களின் குர்ஆன் போன்றவற்றையும் கொலுவில் காட்சிப்படுத்தியுள்ளோம்.
அதேபோல், ஆண்டுதோறும் நாட்டில் பிரசித்தி பெற்ற நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் ஒரு சிறப்பு அம்சமும் இடம் பெறும் அந்தவகையில், இந்த ஆண்டு அயோத்தி ராமர் கோவிலை தத்ரூபமாகத் தயார் செய்து அதை கொலு பொம்மைகளுக்கு மத்தியில் வைத்துள்ளோம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்கும் விதமாக சமீபத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் மற்றும் இஸ்ரோ செயற்கைக்கோள் திட்டம் ஆகியவற்றையும் தயார் செய்து கொலுவில் வைத்துள்ளோம். ஆகவே, இந்த கொலு எங்கள் பகுதியில் உள்ள மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்