சென்னை: மெரினா கடற்கரையில் 92வது விமானப்படை தின நிறைவை முன்னிட்டு இந்திய விமானப்படை சார்பாக விமான சாகச நிகழ்ச்சி நேற்று முந்தினம்(அக்.6) நடத்தப்பட்டது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.
இந்த நிகழ்ச்சியை சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மெரினா கடற்கரையில் குவிந்தனர். அதே நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால் விமான சாகசங்களை காண வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை முடித்த பின்பு மெரினா கடற்கரையில் இருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் 90க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மயக்கம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என முன்கூட்டியே தெரியும் தமிழ்நாடு அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்யவில்லை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியிருந்தார். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரும் முறையான ஆம்புலன்ஸ் கூட கிடைக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தாமதமாக சென்று உயிரிழந்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு "கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்க வில்லை எனவும் கடும் வெப்பத்தினால் நீர் சத்து குறைந்து மயக்கம் அடைந்து உயிரிழந்து இருகின்றனர்" என தெரிவித்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபர்களின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
4 காவல் நிலையங்களில் வழக்கு: இந்த நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.