சென்னை: சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஓட்டுநர் சிக்னல் ஆஃப் செய்து வைத்துள்ளதால், வலது புறம் ஏறி சென்று விடலாம் என ஆட்டோவை திருப்பியுள்ளார்.
அங்கு கான்வாய் பாதுகாப்பில் இருந்த பெட்டாலியன் காவலர் மகேந்திரன் என்பவர் முதல்வர் கான்வாய் வாகனம் மிக அருகில் வந்ததால் வலது புறம் சென்ற ஆட்டோவை இடது புறம் வருமாறு கூறியிருக்கிறார். அப்போது வேகமாக வந்த ஆட்டோ உடனடியாக இடது புறம் வரவே கட்டுப்பாட்டை இழந்து காவலர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத்தின் மகன் அலோக்நாத் தர்ஷன் என்ற 5 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மற்றொரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அடிபட்ட குழைந்தையை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது முதலமைச்சர் கான்வாய் சிறிது நேரம் அங்கு நின்றுள்ளது.