தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏர்ப்போர்ட்டில் ரூ.167 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்; 9 பேர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் கடத்தல் பின்னணி - International Gold Smugglers Arrest - INTERNATIONAL GOLD SMUGGLERS ARREST

International Gold Smuggling Gang Arrested: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்க கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 10:23 AM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கக் கடத்தல் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து, இந்தக் கடத்தல் நடப்பதாகவும் தகவல் வந்ததுள்ளது.

இதனை அடுத்து சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் தொடர்ச்சியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை பயணி ஒருவர் கடத்தி வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்தபோது சுங்க அதிகாரிகள், அவரை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தியதில் இதுபற்றிய முழு தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த சபீர் அலி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, முறைப்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கடையில் ஏழு நபர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான, சிறப்பு அனுமதியுடன் பி.சி.ஏ.எஸ் பாஸ் (BCAS pass) இவர் வாங்கியுள்ளார்.

இந்த பாஸ் மூலம் வெளிநாடுகளில் இருந்து ட்ரான்சிட் பயணிகள் கடத்திக் கொண்டு வரும் தங்கக் கட்டிகளை, விமான நிலையம் பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சபீர் அலிக்கு தகவல் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர், சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, தங்கத்தை அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து வெளியில் கொண்டு வந்து, எந்தவித சுங்க சோதனையும் இல்லாமல், கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், இவ்வாறாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில், சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகள் இலங்கையைச் சேர்ந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் என 9 பேரை கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கடத்தல் கும்பலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்தோடு கடந்த இரண்டு மாதங்களில், இவர்களால் கடத்தல் செய்யப்பட்ட ரூ.167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் கனமழை; வீடுகளுக்குள் மழைநீர்.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details