திருச்சி:நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக மத்திய ரயில்வே அமைச்சகம் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளதாகத் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது "வரும் பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில்வே நிலையங்கள், 1500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.அன்றைய தினம் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.
இதில் திருச்சி ரயில்வே கோட்டத்தைப் பொறுத்த வரையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 ரயில்வே நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 26ஆம் தேதி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 4 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்படவுள்ளது.இதற்காக ரூ.146.7கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.