திருப்பூர்: அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானதாக உள்ள இந்தக் கோயில், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலம் என்பதும், அவர் பாடிய பதியகம் மூலம் முதலை உண்ட மதலையை மீட்ட தலம் என்பது சிறப்பானதாகும். இப்படிப்பட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா பிப்.2ஆம் தேதி நடைபெற்றது.
அதாவது, 250க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் சேர்ந்து, ரூ.4 கோடிக்கும் மேல் திருப்பணிகள் செய்யப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில், ஒரு குழு அமைத்து தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கோயில் நிர்வாகம் சார்பில், தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிட முடிவு செய்து, அவிநாசியில் உள்ள 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினர் அன்னதானம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இதன் மூலமாக, கும்பாபிஷேகம் நடந்த 2ஆம் தேதி முதல் தினமும் தொடர்ச்சியாக 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக எல்லா நாளிலும் பக்தர்களுக்கு கிடைக்கும் வண்ணம் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினர் இந்த அன்னதான பணிகளை செய்து வருகின்றனர். 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவினை சேர்ந்த அண்ணா உணவகம் பூபதி, சீனிவாசன் உள்ளிட்டோர் பலரையும் நேரில் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் ஒருங்கிணைக்கின்றனர்.
இது குறித்து அன்னதான ஒருங்கிணைப்பு செய்து வரும் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழுவில் உள்ள சீனிவாசன் கூறுகையில், "அவிநாசி லிங்கேஸ்வரர் அருளால் தினமும் குறைந்தபட்சம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். இதற்காக பொதுமக்கள், வணிகர்கள், முக்கியஸ்தர்களைச் சந்தித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குபவர்கள், அவர்களே ஏதாவது ஒருவகை உணவு தயார் செய்து தருகிறார்கள்.