திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்(38) கார் ஓட்டுநராக இருந்த நிலையில், காட்பாடி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவர் பழக்கமாகி இருவரும் காட்பாடி பகுதியில் ஒன்றாக இணைந்து கார் ஓட்டும் (டிரைவர்) தொழிலை செய்து வந்தனர்.
இந்நிலையில் வீரபத்திரன் காட்பாடியில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனது மனைவி சத்யாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரபத்திரன் மனைவி சத்யாவிற்கும் அவரது கணவரின் நண்பரான சுரேஷிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட வீரபத்திரன் சுரேஷ் உடனான பழக்கத்தை துண்டித்து கொள்ள கூறியும் சத்யா, அந்த உறவை தொடர்ந்ததால் சத்யாவை காட்பாடியிலேயே விட்டு விட்டு வீரபத்திரன் தனது சொந்த ஊரான ராஜபாளையம் பகுதிக்கு திரும்பி வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சில மாதங்களில் சத்யாவின் தந்தை இறந்துள்ளார். அப்போது சத்யா வீரபத்திரனுடன் சமாதானம் பேசி, சேர்ந்து வாழ்வதாக கூறி காவல் நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப்பட்ட நிலையில், வீரபத்திரனுடன் வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுரேஷ் தொடர்ந்து சத்யாவுடன் போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான ஜாபர், கர்ணன், மணிகண்டன், சசிதரன், மேகராஜ் ஆகிய ஐந்து பேரையும் கார் மூலம் ராஜபாளையம் பகுதியில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்து சுரேஷ் காரில் இருந்தவாறே, மற்றவர்களை மட்டும் சத்யாவின் வீட்டிற்கு அனுப்பி பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற நபர்கள் சத்யாவின் கணவர் வீரபத்திரன், சத்யாவின் தாய் மற்றும் வீரபத்திரனின் 2 பிள்ளைகளை ஆகியோரை தாக்கி அறையில் தள்ளி பூட்டினார். பின்னர் வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்க பணத்துடன் காரில் தப்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: 'தலையில் கல்லை போட்டு'.. ரயிலில் பெண்களுக்கு மட்டுமே குறி... 'மாவு கட்டு' ஹேமராஜின் பகீர் பின்னணி! - VELLORE TRAIN INCIDENT
இந்நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கார் சென்ற திசையை கண்டறிந்து, கார் உரிமையாளரின் முகவரியை கண்டறிந்து, சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளை அடித்து செல்லப்பட்ட நகைகள் நாகப்பட்டினத்தில் நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் சுரேஷின் நண்பர் ஜாபர் மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.